பொது

கோலா சங்லாங்கில் இரண்டு கிராமங்களில் இலக்கிடப்பட்ட கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு

08/08/2020 10:27 PM

கங்கார், 8 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று இரவு தொடங்கி 28 நாட்களுக்கு, கோலா சங்லாங்கில் உள்ள இரண்டு கிராமங்களில் இலக்கிடப்பட்ட கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான TEMCO-வை பெர்லீஸ் மாநில அரசாங்கம் அமல்படுத்துகிறது. 

இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையில், கம்போங் கோலா சங்லாங் மற்றும் கம்போங் தானா திம்போல் ஆகிய கிராமங்களில் இந்த TEMCO அமல்படுத்தப்படும். 

அப்பகுதிகளில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே, இந்த TEMCO அமல்படுத்தப்படுவதாக பெர்லிஸ் மாநில அரசாங்கம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

TEMCO அமல்படுத்தப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அமலாக்க அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

அதேவேளையில், மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தின்போது பின்பற்றப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதுடன், அப்பகுதியில், நுழைவது மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அதிகமான சாலை தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 

-- பெர்னாமா