பொது

கொவிட்-19 நோயை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

08/08/2020 04:49 PM

மூவார், 8 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயை தடுக்க போராடும் முன்னிலை பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு மக்களிடையே குடும்பம் மற்றும் சமுகத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரையை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

புறநகர் மற்றும் நகர்புறங்களில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் இந்தப் பரப்புரையில் ஈடுபடுத்தப்படுவர் என்று, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டுள்ளார். 

புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரையின் கீழ் உள்ள திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசாங்க அமைச்சுகள் மட்டும் செயல்படாது. மாநில அரசாங்கமும் இந்த பரப்புரை வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, இந்தப் பரப்புரையில் அரசியல் தலைவர்கள் உட்பட கிராமத் தலைவர்கள், தெமெங்கோங், பெமஞ்சா, கபிதான், துவாய் ருமா, இமாம் மற்றும் பள்ளிவாசல் உறுப்பினர்கள், தொக் பதின் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரும் உட்படுத்தப்படுவர் என்று இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார். 

சுகாதார அமைச்சின் தகவல்களை மக்களுக்கு பகிர்வதே இந்தப் புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும். 

இன்று ஜோகூர், முவாரிலுள்ள பாகோ விளையாட்டு அரங்கத்தில், பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்ட புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரை நிகழ்வில் உரையாற்றிய, இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறினார். 

-- பெர்னாமா