பொது

மலாக்கா தமிழ்ப்பள்ளியின் அமைப்பாளர் நியமனம் குறித்து அதிருப்தி

07/08/2020 07:44 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலாக்கா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளை கண்காணிக்க புதிய அமைப்பாளராக சீனப் பெண் ஒருவரை நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல் பலரிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. 

அம்மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளை கண்காணிக்க, பல உயர் இந்திய அதிகாரிகள் இருந்த போதிலும், தமிழ் மொழியில் ஆளூமை பெறாத சீனப் பெண் ஒருவரை நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று மலேசியக் கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளிகளுக்கான முன்னாள் முகமை அமைப்பாளர் சு.பாஸ்கரன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவையானவற்றை அறிந்து, அதை பூர்த்திச் செய்து கொடுக்கக்கூடிய தகுதியும் திறமையும் இந்தியர்களிடையே இருப்பதால், இப்பதவிக்கு ஓர் இந்தியரே நியமிக்கப்பட வேண்டும் என்றும் பாஸ்கரன் கூறினார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அனைத்து மாநில கல்வி இலாகாவின் நிர்வாகம் புதிய முறைக்கு மாற்றி அமைக்கப்பட்டதாகவும், அமைப்பாளரின் பதவி உதவி இயக்குநராக மாற்றப்பட்டதாவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே, இனி வரக்கூடிய நாட்களில் இந்தியர்களுக்கு வருத்ததை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நியமனங்களைச் செய்யக் கூடாது என்றும் பாஸ்கரன் கேட்டு கொண்டார்.  

-- பெர்னாமா