பொது

துன் டாக்டர் மகாதீரின் புதிய கட்சி

07/08/2020 07:25 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அதிகாரப்பூர்வ பெயர் வழங்கப்படாத புதிய கட்சியை அமைப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அறிவித்திருக்கிறார். 

ஆனால், அக்கட்சி பெரிகாத்தான் நெசியோனால் அல்லது நம்பிக்கைக் கூட்டணியில் இணைவது அல்லது ஆதரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்றும் முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். 

பெர்சத்து கட்சியின் தலைவர், டான் ஶ்ரீ முகிடின் யாசின் மீதான நம்பிக்கையை இழந்ததினால், இந்த புதிய கட்சியை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார். 

ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கவிருக்கும் இப்புதிய கட்சிக்கு டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைவராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 

அதோடு, இக்கட்சி மற்ற இனங்களும் சரிசமமான முறையில் நடத்தப்படுவதோடு அவர்களின் தேவைகள் பூர்த்திச் செய்வதையும் உறுதிச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா