பொது

கொவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரை

06/08/2020 09:38 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒரே சமூகமாக சுய கட்டுப்பாட்டை உருவாக்கும்   புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரை, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்படும்.

முன்னிலைப் பணியாளர்கள்  கொவிட் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட உதவும் முயற்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தங்களையும் தங்களின் குடும்பங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க மக்களை மேம்படுத்துவதே இந்தப் பரப்புரையின் நோக்கமாகும் என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃப்புடின் அப்துல்லா தெரிவித்தார்.

கொவிட் நோய்த்தொற்றைத் தடுப்பதில் மலேசியா சிறந்த நாடுகளில் ஒன்றாகும்.

ஆனாலும் அந்தக் கிருமியின் தாக்கம் இன்னும் நம்மிடையே உள்ளது.

எனவே, புதிய இயல்பினையை மக்கள் பின்பற்றத் தவறினால் எந்த நேரத்திலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

உதாரணத்திற்கு பள்ளிவாசலுக்கு தொழுகச் சென்றால் செயல்பாட்டு தர விதிமுறையை முறையாகப் பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், தங்களுக்கான தொழுகைக் கம்பளத்தை உடன் கொண்டு வருதல், தொடுகை இடைவெளியைப் பின்பற்றுதல், தொழுகைக்கு பின்னர் கூட்டம் கூட்டமாக வெளியேறுதல் ஆகியவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

இதனிடையே, புதிய இயல்பினை வழக்கமாக்கும் பரப்புரையை பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் ஜோகூர், பாகோ விளையாட்டு வளாகத்தில் விரைவில் துவக்கி வைப்பார். 

தற்போதைய நிலைமைக்கு உட்பட்டு அதன் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கு இவ்வாண்டு இறுதி வரை இது நீடிக்கும் என்றும் சைஃப்புடின்  கூறினார். 

- பெர்னாமா