பொது

பெய்ரூட்டுக்கு தேவையான உதவியை வழங்க மலேசியா தயார் - பிரதமர்

05/08/2020 07:37 PM

கோலாலம்பூர், 05 ஜூலை (பெர்னாமா) -- வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்படைந்திருக்கும், லெபனான் தலைநகரமான பெய்ரூட்டுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக, பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்திருக்கும் குடும்பத்தாருக்கு, மலேசிய அரசாங்கமும் மக்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, பெய்ரூட்டில் உள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் டான் ஶ்ரீ முகிடின், இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், லெபனான்னில் பணிபுரியும் மலேசிய ராணுவப்படை உறுப்பினர் யாரும், இச்சம்பவத்தினால் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

லெபனான்னில், கடந்தாண்டில் அக்டோபர் மாதம் முதல், ஐ.நா. இடைக்கால குழுவில் இணைந்த, 216 மலேசிய அமைதிப்படை MALBATT 850-7 உறுப்பினர்கள், காயமடைந்ததாக தங்கள் தரப்பு இதுவரை எந்தவொரு தகவலையும் பெறவில்லை என்று மலேசிய ராணுவப்படை, ஏ.டி.எம். தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ அஃபெண்டி புவாங் தெரிவித்தார்.

ஐ.நா.-வின் உத்தரவின் கீழ், லெபனான்னில், ஏ.டி.எம். அமைதிப்படை உறுப்பினர்கள் பணியாற்றி வந்ததாகவும், இதுவரை புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அஃபெண்டி தெரிவித்தார்.

-- பெர்னாமா