பொது

சட்டவிரோதக் குடியேறிகளை அனுமதிக்கும் அமலாக்க அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

05/08/2020 05:25 PM

கோலாலம்பூர், 5 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் அமலாக்க அதிகாரிகள் உட்பட எந்தவொரு தரப்பினர் மீதும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். 

மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் OP BENTENG நடவடிக்கையின் வழி, சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டிற்குள் கொண்டுவர உதவிதற்காக மொத்தம் 25 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் முஹமாட் சையிட் தெரிவித்திருக்கிறார். 

OP BENTENG நடவடிக்கையால் கைதுச் செய்யப்பட்டிருக்கும் ஐந்து இராணுவ வீரர்கள் உட்பட 18 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாக இஸ்மாயில் கூறினார். 

"OP BENTENG நடவடிக்கையில், தகவல் கொடுத்த அல்லது சட்டவிரோதமாக குடியேறிகளை நம் நாட்டிற்குள் கொண்டுவர உதவிய அமலாக்க அதிகாரிகளின் செயல்களை அமைச்சும் அரசாங்கமும் கடுமையாக கருதுகிறது," என்று  இஸ்மாயில் தெரிவித்தார்.

இதுவரை, 2625 சட்டவிரோதக் குடியேறிகளும், அவர்களை அழைத்து வந்த 602 பேரும், மற்றும் இக்குற்றத்தை புரிய உறுதுணையாக இருந்த 370 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த 5613 இந்தோனேசியர்கள், 3990 மியன்மார் பிரஜைகள் மற்றும் 2664 வங்காளதேசிகள் , அவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். 

-- பெர்னாமா