பொது

நீதிமன்றத்தை இழிவுப்படுத்துவதை எதிற்கொள்ள புதிய சட்டங்கள் - அரசு ஆய்வு

04/08/2020 02:05 PM

கோலாலம்பூர், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டில் நீதிமன்றத்தை இழிவுப்படுத்தும் வழக்குகளை கையாள்வதற்கு குறிப்பிட்ட சில சட்டங்களை இயற்றுவது தொடர்பான அவசியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. 

இந்தியா இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடப்பில் உள்ள சட்டங்களை ஒப்பிட்டு தேசிய சட்டத்துறை அலுவலகம் ஆய்வு நடத்தி வருவதாக, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியூடின் ஹசான் தெரிவித்திருக்கிறார். 

"இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரிடம் இருந்தும், அரசாங்கம் கருத்துகளை பெறும்" என்று டத்தோ தக்கியூடின் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை மக்களவை கேள்வி நேரத்தின்போது சமூக வலைத்தளங்களில் நீதிமன்றத்தை இழிவுப்படுத்துவது குறித்த வழக்குகள் அதிகரித்து வருவதைக் கையாள்வதற்கு அரசாங்கம் சிறப்பு சட்டங்கள் எதனையும் இயற்ற எண்ணம் கொண்டுள்ளதா என்று, பத்து சபி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ லியூ வூய் கியொங் எழுப்பிய கேள்விக்கு தக்கியூடின் இவ்வாறு பதிலளித்தார். 

2010-ஆம் ஆண்டு தொடங்கி தேசிய சட்டத்துறை அலுவலகம் இவ்விவகாரத்தை ஆராய்ந்து வருவதாகவும் 2013-ஆம் ஆண்டு சட்டவரைவு நிறைவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா