சிறப்புச் செய்தி

பூக்கள் விற்பனைகளில் எதிர்காலத்தை விதைத்த வியாபாரிகள் நெருக்கடியைச் சந்திக்கின்றனர்

03/08/2020 04:51 PM

கோலாலம்பூர் 03 ஆகஸ்டு (பெர்னாமா) --  கொவிட்-19 நோய் தொற்று தாக்கத்தினால் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் புரியும் வியாபாரிகளும் பெருமளவில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். 

குறிப்பாக, பூ விற்பனைகளில் தங்களின் எதிர்காலத்தை விதைத்திருக்கும் வியாபாரிகள் இந்த சூழலில் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்துள்ளது. 

கடந்த மார்ச் 18-ஆம் தொடங்கி அமலுக்கு வந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால், கோவில்கள் மூடப்பட்டதுடன், திருமணங்களும் சுபகாரியங்களும் நடைபெறுவது நின்று போனது. 

இதனால், கொல்லைகளில் தோட்டம் போட்டவர்கள் தொடங்கி, அதனை சந்தைப்படுத்தி, விற்பனைக்கு கொடுக்கும் வியாபாரிகள் வரை பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். 

நாட்டின் நிலமை சற்று சீரடையத் தொடங்கிய பின்னர், அமல்படுத்தப்பட்டுள்ள மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவில் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள செய்தி அனைத்து தரப்பினருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இருந்த போதிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, பூக்களைப் பெறுவதில் வியாபாரிகள் சிரமத்தை எதிர்நோக்குவதாக கூறுகின்றனர். 

இதனிடையே, சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அனுமதிகளுக்குப் பிறகும் பூக்கள் மற்றும் பூமாலைகளின் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால், ஒரு சில பூக்கள் மற்றும் மாலைகளின் விலையும் சற்று ஏற்றம் கண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், இந்த கால கட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு பூக்கள் கிடைப்பதும் கடினமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

தோய்வடைந்த வியாபாரங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போதைய நிலைமையை ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டும் என்ற சூழல் வியாபாரிகளைச் சமாதானப்படுத்திகொள்ள வைத்திருப்பதுதான் உண்மையாகும். 

--பெர்னாமா