பொது

MYSEJAHTERA செயலியின் பயன்பாடு வணிகத் தளங்களில் கட்டாயமாக்குவீர்

03/08/2020 04:54 PM

கோலாலம்பூர் 03 ஆகஸ்டு (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வணிகத் தளமும் MYSEJAHTERA செயலியைப் பயன்படுத்தி தங்களின் வணிகத் தளத்திற்கு வருபவர்களின் நுழைவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

மிக விரைவில் அந்த செயலி அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெறச் செய்வதை தேசிய சட்டத்துறை தலைவர் உறுதிபடுத்துவார் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

''நிறைய செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நான் ஒரு பேரங்காடிக்குச் சென்றபோது MYSEJAHTERA செயலியைப் பயன்படுத்த நினைத்தேன். ஆனால் அங்கு அந்த செயலி இல்லை. அதனால் நான் என்னுடைய குறித்த விவரங்களை கைகளால் புத்தகத்தில் எழுதிவிட்டு வரும் நிலை ஏற்பட்டது. அதனால்தான் அனைத்து வணித் தளங்களும் MYSEJAHTERA செயலியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகள் இருந்தாலும் இந்த MYSEJAHTERA செயலியைக் கட்டாயம் அனைத்து வணிகத் தள உரிமையாளர்களும் கொண்டிருத்தல் அவசியமாகும். இச்செயலியானது மிக விரைவில் அரசிதழில் பதிவேற்றம் பெறுவது குறித்து தேசிய சட்டத்துறை தலைவர் உறுதிபடுத்துவார்'' என்று இஸ்மாயில் கூறினார். 

இருப்பினும், புறநகர்ப் பகுதிகளில் இணைய வசதி இல்லாத நிலையில் அங்கு MYSEJAHTERA செயலி பயன்பாடு இல்லாமல் அவர்கள் வழக்கம் போல வருகைப் புத்தகத்தில் தங்களின் விவரக் குறிப்புகளை எழுத்து வடிவில் பதிவிட்டுச் செல்லலாம் என்றும் இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கண்காணிக்க உதவும் பொருட்டு  MYSEJAHTERA செயலியின் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.