அரசியல்

சபா தேர்தலில் 90 விழுக்காட்டு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் - அம்னோ திட்டவட்டம்

02/08/2020 05:56 PM

கோத்தா கினபாலு, 02 ஆகஸ்ட் (பெர்னாமா) --வரும் சபா மாநில தேர்தலில், 85 முதல் 90 விழுக்காடு புதிய வேட்பாளர்களை அம்னோ களமிறக்கவுள்ளது.

கட்சியைப் பிரதிநிதித்திருக்கும் அனைத்து வேட்பாளர்கள் மூலமாக அம்னோ சபா மக்களுக்கு புதிய வாய்ப்புகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தித் தரும் என்று சபா அம்னோவின் தொடர்பு பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார். 

''நாங்கள் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம், எங்களது இலக்குகளுக்கு உத்தரவாதம் அளித்து அதனை நிறைவேற்றுவோம், பொருளாதார வளர்ச்சி சபாவிலுள்ள நகர்புறம் மற்றும் புறநகர் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்'', என்று புங் குறிப்பிட்டார்.

மாநில தேர்தலுக்கு தற்போது சபா அம்னோ, தகுதியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு வருவதாகவும் முடிவு செய்யப்பட்ட பின்னர் அது குறித்து விரைவில் அறிவிக்க்கப்படும்  என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற அம்னோ கூட்டத்திற்கு புங் மொக்தார் தலைமையேற்றார். 

மற்றொரு நிலவரத்தில், கட்சியின் தொகுதியை முடிவு செய்வதற்கு முன்னர் அம்னோ  உட்பட தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவிருப்பதாக புங் மொக்தார் தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணியுடன் இணைந்து பெர்சத்து, பி.பி.எஸ் (PBS) மற்றும் ஸ்டார் (STAR) ஆகியவை 73 தொகுதிகளில் போட்டியிடும் வேளையில் அம்னோ 32க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 60 மாநில சட்டமன்ற தொகுதிகளில், 32 தொகுதிகளில் போட்டியிட்டு அம்னோ 17 தொகுதிகளை வென்றது. 

வரும் மாநில தேர்தலில் கூடுதலாக 13 தொகுதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

- பெர்னாமா