உலகம்

சில உலக நாடுகளின் செய்தி தொகுப்பு

01/08/2020 08:07 PM

வாஷிங்டன் டீசி, 31 ஜூலை (பெர்னாமா) -- உலகம் முழுவதும் இதுவரை, 17,758,802 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, 682,199 பேர் உயிரிழந்திருப்பதோடு, 11,161,510 பேர் குணமடைந்திருக்கின்றனர். 


இங்கிலாந்து

கொவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், அமலில் இருக்கும் கட்டுப்பாட்டுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக, இங்கிலாந்து போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று ஜோன்சன் கூறினார்.


பிலிப்பைன்ஸ்

பெட்ரோல் வாங்க இயலாதவர்கள், மண்ணெண்னையைப் பயன்படுத்தி முகக்கவசங்களை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அவரின் அதிகாரிகளிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், நாட்டு மக்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று ரோட்ரிகோ அறிவுறுத்தி வருகிறார். 


இத்தாலி

கொவிட்-19 நோயின் எதிரொலியால், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் இத்தாலியின் பொருளாதாரம் 12.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மை பிரச்சனைகளும் அதிகரித்து வருவதால், இதனை களைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 


ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒன்பது பேர் பலியாகியிருக்கின்றனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

-- பெர்னாமா