அரசியல்

சபா தேர்தல்: 45 இடங்களில் பெர்சத்து போட்டியிடும்

01/08/2020 08:03 PM

சபா 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஜூலை 30-ஆம் தேதி சபா சட்டமன்றம் கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து நடைபெற விருக்கும் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 73 இடங்களில், 45 இடங்களில் மலேசிய பெர்சத்து கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது.  

இத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சிகள், அம்னோ மற்றும் தேசிய முன்னணியுடன் பேச்சு வார்த்தை நடத்த, சபா மாநில பெர்சத்து கட்சி தயாராக இருப்பதாக, அக்கட்சியின் மாநில தலைவர் டத்தோ ஶ்ரீ பங்லிமா ஹஜி ஹஜிஜி ஹாஜி நூர்  (DATUK SERI PANGLIMA HAJI HAJIJI HAJI NOOR) தெரிவித்தார்.

சபா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் கேந்திரங்களின் ஏற்பாடுகளை இலகுவாக்கும் நோக்கில், சபா பெர்சத்து கட்சி அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக, ஹஜிஜி இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


அதோடு, சபா மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தயாரித்து வருகிறது. 

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அதில் முதன்மை அம்சமாகும் என்று அவர் கூறினார்.  

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் சபா மாநில பெர்சத்து கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் என்று ஹஜிஜி குறிப்பிட்டார்.  

- பெர்னாமா