பொது

நேற்று வரை நாடு திரும்பிய 3,371 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

01/08/2020 06:31 PM

புத்ராஜெயா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --நேற்று வரை, அனைத்துலக நுழைவாயில்கள் வழியாக நாடு திரும்பிய 3,371 பேர், 14 நாட்களுக்குக் கட்டாய தனிமைப் படுத்தும் நடவடிக்கைகாக தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான், சரவா, சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களின், 14 தங்கும் விடுதிகள் உட்பட ஐந்து பொது பயிற்சி மையங்களான ஐ.எல்.ஏ-விலும் (I.L.A)-விலும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறி இருக்கிறார். 

பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், புருணை, கட்டார், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஹாங்காங், இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஜப்பான், துருக்கி, தென் கொரியா, ஈரான், வங்காள தேசம், தைவான், சீனா , இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 23 நாடுகளிலிருந்து அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதோடு, தங்களின் சொந்த இடங்களில் 14 நாட்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 2,271 பேர் மீது, அரச மலேசிய போலீஸ் படை,  சோதனை மேற்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை 27 முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரையில், வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தர விதிமுறையான SOப்--யைப் பின் பற்றத் தவறியதற்காக அறுவர் மீது நடவடிக்கை எடுப்பட்டிருப்பதாக இஸ்மாயில் சப்ரி கூறினார். 

மற்றொரு நிலவரத்தில், மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான PKPP--யை மீறிய குற்றத்திற்காக 134 நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

- பெர்னாமா