சிறப்புச் செய்தி

இதுதான் பிரச்சனைக்குக் காரணம் - சுகுபவித்ரா

31/07/2020 10:02 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) -- வலையொளியில் இதுவரை சமையல் கலையைச் சார்ந்த காணொளிகளை மட்டுமே பகிர்ந்து வந்த எஸ். பவித்ரா முதன் முறையாக தமது கணவர் சுகு, கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சர்ச்சை பற்றிய விளக்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

'இதுதான் பிரச்சனைக்கு காரணம் ' என்ற தலைப்பில் அவர் அந்த காணொளியை வெளியிட்டுள்ளார். 

அண்மையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால், சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதன் வழி மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா, மீண்டும் சுகுவை மன்னித்து அவரோடு சேர்ந்து வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார்

தமது கணவரைத் திருமணம் செய்த ஏழு ஆண்டுகளில் குடும்பத்தாரின் உதவியின்றி அவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், வலையொளியில் பிரபலமான சில காலகட்டத்திற்கு பின்னர், பணத்தைக் குறியாக வைத்து தமது குடும்பத்தினர் மீண்டும் தொந்தரவு செய்யத் தொடங்கியதாக கூறினார். 

அதன் விளைவாகத்தான் மிகப்பெரிய சர்ச்சை எழுந்ததாக, 28 வயதுடைய பவித்ரா தமது காணொளியில் கூறியுள்ளார். 

அதேவேளையில், எந்த ஊடகம் தம்மை வளர்த்துவிட்டதோ, இறுதியில் அதே ஊடகத்தின் மூலம் தமது வாழ்க்கை சில பிரச்சனைகளால் திசை மாறியதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார். 

கணவரின் உதவியினால் மட்டுமே தம்மால், வளர முடிந்ததாகவும்,  சொந்தங்களின் மூலம் எழுந்த சில குடும்ப பிரச்சனைகளால் தான் அவர் அன்று கைதான சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் அந்த 5 நிமிட காணொளியில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வலையொளியில் பதிவேற்றம் செய்த சமையல் தொடர்பான 98 காணொளிகளையும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அழித்த அந்த தம்பதியர் மீண்டும் புதிய சமையல் காணொளிகளை பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

--பெர்னாமா