பொது

தொற்று அதிகரிப்பு: எஸ்.ஓ.பி-யை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் இணக்கம்

25/07/2020 06:08 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- கடந்த நான்கு தினங்களாக கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கமாக உள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் தளர்வு வழங்கப்பட்டிருந்த செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. 

அதோடு, ஜூலை 31-ஆம் தேதி கொண்டாடப்படும் தியாகத் திருநாளுக்கான எஸ்.ஓ.பி குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார். 

தற்போது அதிகரித்து வரும் இப்பெருந்தொற்றை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது. 

குறிப்பாக, சரவா மாநிலத்தில் பதிவாகியுள்ள 40-க்கும் மேற்பட்ட நோய் சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார். 

தியாகத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து, நாளை ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்பக் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மூத்த அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். 

"வரும் திங்கட்கிழமை தொழில்நுட்ப செயற்குழு தியாகத் திருநாளுக்கான செயல்பாட்டு தர விதிமுறையை வெளியிடும். இந்த சமயத்தில் சொந்தத் ஊர்களுக்கு மக்கள் திரும்புவதால் அங்குள்ளவர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் என்று கவலை அளிக்கிறது. தியாகத் திருநாள் கொண்டாடத்தில் 20 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அனைத்து நிர்ணயிக்கப்பட்ட விதிமுறையை திங்களன்று நான் அறிவிப்பேன்", என்று அவர் கூறினார். 

திங்கட்கிழமை அறிவிக்கப்படும் புதிய எஸ்.ஓ.பி-யை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய தியாகத் திருநாள் முழுவதும் போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 

மற்றொரு நிலவரத்தில், சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கும் கப்பல் பணியாளர்களுக்கும் அரசாங்கம் ஒரு புதிய எஸ்ஓபியை நிர்ணயிக்கவுள்ளதாக இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார். 

-- பெர்னாமா