பொது

இந்தியாவில் சிக்கிக் கொண்டிருந்த 96 மலேசியர்கள் நாடு திரும்பினர்

18/07/2020 07:31 PM

சிப்பாங் , 18 ஜூலை (பெர்னாமா) -- இந்தியாவில் சிக்கிக் கொண்டிருந்த 96 மலேசியர்கள் இன்று காலை 6.31 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

மனிதாபிமான அடிப்படையில்,  நட்மா (NADMA) எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மலின்டோ ஏர் சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களில், 62 பேர் தப்லீக் பேரணியில் கலந்து கொண்டவர்களாவர். 

9 விமான குழுவினர்கள் கொண்ட விமானம் நேற்று புது டெல்லி, இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டது. 

இந்தியாவில் அவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகளையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்று  நட்மா தலைமை இயக்குநர் டத்தோ மொக்தார் முஹமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். 

கொவிட்-19 நோயினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து திரும்பியிருப்பதால் அவர்களை 14 நாட்களுக்கு நெகரி செம்பிலானில் இருக்கும் கண்காணிப்பு மையத்தில் கட்டாயம் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக மொக்தார் கூறினார். 

தப்லீக் பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர் பிப்ரவரி மாதம் முதலே அங்கு மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருப்பதாக மொக்தார் தெரிவித்தார். 

நாடு திரும்பிய அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய நாள் ஒன்றுக்கு இரு முறை சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெளிவுப்படுத்தினார். 

இந்நிலையில்,, குடிநுழைவு விவகாரத்தினால், இன்னும் சிலர் இந்தியாவிலேயே சிக்கிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார் 

வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதில் மலேசியா மேற்கொண்ட ஐந்தாவது நடவடிக்கை இதுவாகும். 

இதற்கு முன்னர், சீனா, இத்தாலி, இந்தோனேசியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த மலேசியர்கள் நாடு திரும்ப  நட்மா ஏற்பாடு செய்திருந்தது. 

-பெர்னாமா