உலகம்

சூனொட்டிக் எனப்படும் புதிய நோய்த்தொற்று

07/07/2020 07:47 PM

நியூயார்க், 7 ஜுலை (பெர்னாமா) -- உலகில் அண்மைய காலமாக , சூனொட்டிக் (Zoonotic) எனப்படும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தொற்றும் நோய்கள் அதிகமான அளவில் பரவி வருகின்றன. 

இந்நோய்க்கான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் அந்நோய் பெருந்தொற்றுகளாக உருவெடுக்கக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. எச்சரித்திருக்கிறது.

கொவிட்-19, இபோலா (EBOLA), மெர்ஸ் (MERS), வெஸ்ட் நைல் (WEST NILE) மற்றும் ரிஃப்ட் வெலி (RIFT VALLEY) காய்ச்சல் ஆகிய நோய்கள் மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கிருமிகளினால் ஏற்பட்டவையாகும் என்று ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் இங்கேர் எண்டர்சேன் தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்கு முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்காததால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெரும் நாடுகளில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 

எனினும், இந்த அதிகரிப்பு இயல்பாக நடந்தது அல்ல. 

மாறாக, பிராணிகளின் புரதத்திற்கான தேவை அதிகரிப்பு; விவசாயத் தேவை, வனவிலங்குகளை அதிகளவு வேட்டையாடுதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவையே இதற்கு காரணமாகும் என்று ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அனைத்துலக கால்நடை ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

மனிதர்களுக்கும் நாட்டின் பொருளாதரத்திற்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய பெருந்தொற்றுகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக இங்கேர் எண்டர்சேன் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா