சிறப்புச் செய்தி

சிறார்களின் கூச்சலின்றி ஓய்ந்து கிடந்த வகுப்பறைகள் மீண்டும் களைக் கட்டின

01/07/2020 05:28 PM

கோலாலம்பூர், 1 ஜூலை (பெர்னாமா) -- சிறார்களின் கூச்சலும் பாய்ச்சலுமின்றி ஓய்ந்து கிடந்த வகுப்பறைகள் மீண்டும் களைக் கட்டத் தொடங்கி இருக்கின்றன.

வீட்டிலேயே முடங்கி கிடந்த அரும்புகளின் குறும்புகள் மீண்டும் சிறகடிக்க ஆரம்பமாகி இருக்கின்றன.

இவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களோடு வட்டம் அடிக்கும் பணிகளும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு துவக்கம் கண்டிருக்கின்றன.

சிறார் மற்றும் பாலர் பள்ளிகளின் இன்றைய முதல் நாள் குறித்த சில அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றது பெர்னாமா தமிழ்ச்செய்தி.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால், நாடு தழுவிய அளவில், கடந்த 100 நாட்களுக்கு மேல், மூடப்பட்டிருந்த பாலர் பள்ளிகள் இன்று ஜூலை முதலாம் தேதியிலிருந்து மீண்டும் செயல்பட அனுமதிக்கட்டிருந்தன. 

ஆசிரியர்கள் மாணவர்களைக் காணாமலும், கற்பித்தல் பணிகள் தொடரப்படாமல் முடக்கம் கண்டிருந்த நிலைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி இருப்பது இரண்டு தரப்பினருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதேவேளையில், சிறார்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்.ஓ.பியைப் பள்ளிகள் பின்பற்றுவதாக ஈப்போ, கிண்டர் லேப்ஸ் பாலர் பள்ளி ஆசிரியர் அழகம்மை பாரசராமனும் பாகான் டத்தோ பாலர் பள்ளி ஆசிரியர் ஜனனி பழனிசாமியும் காணொளி பதிவுகளின் மூலம் தெரிவித்தனர். 

இன்றைய சுகாதார நிலைமையை கவனத்தில் கொண்டு பெற்றோர்களில் இன்னும் சிலர் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அஞ்சுவதாகவும் சில ஆசிரியர்கள் கூறினர். 

அதோடு, மீண்டும் நண்பர்களை சந்திப்பதே மாணவர்களின் குதூகலகாக உள்ளது. 

தடைப்பட்டிருந்த பாடங்களைத் தொடர்வதில் ஆர்வமாய் இருக்கும் அதேவேளையில், அவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். 

இதனிடையே, கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்தால், கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த BE SMARTS KINDER KIDS, 50 மாணவர்களுடன் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதை பெர்னாமா நேரில் சென்று கண்ணோட்டமிட்டது. 

புதிய இயல்பில் பள்ளிகள் தொடங்கி இருப்பதால், அதனை புரிந்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட்டு அதன் பிறகே அங்கு பாடங்கள் தொடங்கப்படும் என்று அப்பாலர் பள்ளியின் நடத்துனர் தெரிவித்தார். 

சிறார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற அதே நேரத்தில் அங்கு, 80 விழுக்காடு மாணவர்களே வருகை தந்திருப்பதாக BE SMARTS KINDER KIDS பாலர் பள்ளி நடத்துனர் மீராதேவி சிவகுமார் தெரிவித்தார்.

பாலர் பள்ளிகள் அனைத்தும், ஜூலை முதலாம் தேதி தொடங்கி செயல்பட கல்வி அமைச்சு கடந்த ஜூன் 
15-ஆம் தேதி அறிவித்திருந்தது. 

-- பெர்னாமா