பொது

படகு கவிழ்ந்த சம்பவம்: ஐந்தாவது சடலம் மீட்பு

30/06/2020 08:24 PM

பாச்சோக், 30 ஜூன் (பெர்னாமா) -- கிளந்தானில், படகு ஒன்று கவிழ்ந்த சம்பவம் தொடர்பில், மேலும் ஒரு சடலம், இன்று காலை எட்டு மணியளவில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

நேற்றிரவு 8 மணியளவில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தில், இதுவரை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக, கிளாந்தான் மாநில, மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன் முஹமட் நூர் ஷாயம் அஸ்மாவி யாகோப் தெரிவித்திருக்கிறார்.

30 வயதுடைய அஹமாட் ஷாஃபிக் சே அலிமின் சடலம், கவிழ்ந்த படகின் ஒரு அறையில் காலை 7 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

கவிழ்ந்த அப்படகு, தற்போது கோல கெமாசின் படகுதுறையில் இருந்து 18 கடல் மைல் தூரம் வரையில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை எளிமையாக்குவதற்கு, அந்த படகை, கெமாசின் நதி முகத்துவாரத்திற்கு கொண்டுவர தமது தரப்பு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

இதில் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், அப்படகு நடுக்கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதுடன் மூழ்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்தார். 

நேற்றிரவு, 20 மீன்ப்பிடிப்பவர்கள் ஏறிச் சென்ற படகு, புயற் காற்று காரணமாக கவிழ்ந்தது. 

இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், ஐவர் உயிரிழந்திருக்கின்றனர். 

மேலும் மூவர் காணமல் போயிருக்கின்றனர். 

--பெர்னாமா