பொது

நாளை முதல் அதிகமான துறைகளுக்கு அனுமதி

30/06/2020 12:05 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் மூடப்பட்ட அதிகமான துறைகள் நாளை, செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.

கடந்த ஜுன் 10-ஆம் தேதி மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல், கொவிட்-19 பரவுவதைத் தடுக்க, மக்கள் புதிய இயல்பு முறையைப் பின்பற்றி செயல்படும் வகையில், சில தளர்வுகளுடன் பல்வேறு துறைகள் கட்டம் கட்டமாக இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை மேலும் சில துறைகள் இயங்கள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் அதற்கான, தயார்நிலை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை, ஜீலை முதலாம் தேதி முதல், அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பாலர்பள்ளியும் சிறார் பராமறிப்பு மையங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, பேரங்காடிகளிலும் ஒரு முறை மட்டுமே உடல் உஷ்ண பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

நாடு முழுவதிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட, ஊழியர்களை உட்படுத்திய நீர் கேளிக்கை பூங்கா உட்பட 54 கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, அழகு, உடல் ஆரோக்கியம், தொடர்பான துறைகள், பாத நரம்பியல் சிகிச்சை மையங்கள், திரையறங்குகள், மூடப்பட்ட மண்டபங்களில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்த மற்றும் நீச்சல் குள நடவடிக்கைகள் ஆகியவை ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

திருமணம், நிச்சயதார்த்தம், திருமண நாள் நிறைவு விழா, பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சமயத்தை உட்படுத்திய அனைத்து சமூக நிகழ்ச்சிகள் நடத்ததுவும் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சுக் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி.-யை பின்பற்றுமாறு சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் இஸ்மாயில் சப்ரியும் பொது மக்களுக்கு நினைவுறுத்தி இருக்கின்றனர்.

-- பெர்னாமா