Thursday, 02 Jul 2020
சிறப்புச் செய்தி
28/06/2020 08:26 PM

கோலாலம்பூர், 28 ஜூன் (பெர்னாமா) -- ஜூலை முதலாம் தேதி முதல் பாத நரம்பியல் சிகிச்சை மையம், மீண்டும் செயல் படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது. 

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடங்கப் பட்டது முதல், இச்சிகிச்சை மையங்கள் மூடப் பட்டதால், இத்துறையை சார்ந்தவர்கள் 100 நாட்களுக்கும் மேலாக தங்களின் வருமானத்தை இழந்து பல சவால்களை எதிர்நோக்கினர். 

அரசாங்கத்தின் இம்முடிவு, இத்துறையை சார்ந்த, குறிப்பாக பார்வையற்றோர்களுக்கு புத்துயிரை ஏற்படுத்தி இருக்கிறது. 

கொவிட்-19 நோய்த் பரவலால், இந்த பாத நரம்பியல் சிகிச்சை மையங்கள் புதிய இயல்பு முறையில் செயல்பட வேண்டி இருக்கின்றன. 

மாற்றுத்திறனாளிகளுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தினாலும், தங்களின் ஒரே வருமானமான இத்தொழிலில், புதிய இயல்பு முறைகளுடன் மீண்டும் தொடங்க தாம் தயாராக இருப்பதாக முழு நேர பாத நரம்பியல் சிச்சையாளர் எஸ்.வனகோபால் தெரிவித்தார். 

மாற்று திறனாளிக்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் முன்னாள் குண்டு எறிதல் வீரராக விளங்கிய இவருக்கு, குடும்ப செலவை நிர்வகிக்க இத்தொழில்தான் ஒரே வருமானமாக இருந்து வந்தது. 

இதனிடையே, பார்வையற்றோர் வழிநடத்தும் பாத நரம்பியல் சிகிச்சை மையங்களுக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருவது வேதனையளிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். 

எனவே, இந்த தொழிலை விளம்பரப்படுத்துவதில் அரசாங்கம் பெரும்பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வனகோபால் முன் வைத்திருக்கிறார். 

அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் பாத நரம்பியல் சிகிச்சை மையங்களுக்கான செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றுவதில், மாற்றுத்திறனாளிகள் சற்று சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

ஜூலை முதலாம் தேதி தொடங்கவிருக்கும் அனைத்து பாத நரம்பியல் சிகிச்சை மையங்களிலும், முகக்கவசம், பாதுகாப்பு உடை, கிருமிநாசினி திரவம் போன்ற உபகரணங்கள் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே, பொதுமக்கள் www.mab.org.my என்ற அகப்பக்கத்தில் "how to donate" என்ற இணைப்பின் மூலம் இதற்கான நன்கொடைகளை வழங்கலாம். 

அல்லது 29200008267 என்ற ஹொங் லியோங் வங்கிக் கணக்கிலும் அவர்கள் பணத்தை நேரடியாக செலுத்தலாம். 

 

இந்த நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் போது பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக பாத நரம்பியல் சிகிச்சை மையத்தை நடத்தி வரும் லோகேஸ்வரி தெரிவித்தார். 

பார்வை இழந்த லோகேஸ்வரி ஷா ஆலாம் ஶ்ரீ முடாவில், கடந்த 10 ஆண்டுகளாக, பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இந்த பாரம்பரிய பாத நரம்பியல் சிகிச்சையை வழங்கி வருகிறார். 

கொவிட்-19 நோயின் காரணமாக இந்த மையம் 100 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்ததால் வருமானம் இல்லாமல் வாடகை மற்றும் இதர மாதக் கட்டணங்களை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக அவர் கூறினார். 

இந்நிலையில், பாத நரம்பியல் சிகிச்சைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதால் தமது தொழிலை வழக்கம்போல் தொடர முடிவதோடு, தமது பணச்சுமை குறையும் என்றும் லோகேஸ்வரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க