Thursday, 02 Jul 2020
சிறப்புச் செய்தி
27/06/2020 02:20 PM

கோலாலம்பூர், 27 ஜூன் (பெர்னாமா) -- காலம் காலமாக கிராமப்புறங்களில் பாரம்பரிய விவசாயம் செய்து வந்த மக்கள், மேம்பாடு அடைந்து நகர்புறங்களில் புலம்பெயர்ந்தாலும், தங்களின் வசிப்பிடங்களில், முடிந்தவரை சிறிய அளவில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை சுயமாகவே பயிரிட்டு வந்தனர். 

தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது நகர்புறங்களில் நிலமின்றி, மண்ணின் பயன்பாடு இல்லாமல், வெறும் நீரைக் கொண்டு, ஹைட்ரோபோனிக் முறையில் தற்போது பயிரிட தொடங்கியிருக்கின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளாக, நகர்புறத்தில் போதுமான நிலம் இல்லாத காரணத்தால் ஒரு கட்டிடத்தில் பயன்படுத்தப்படாத கார் நிறுத்தும் இடத்தில் ஃபெர்திகேஷன் எனப்படும் நீர்பாசன முறையில் உரங்களை பயன்படுத்தி கிர்ணி பழத்தை பயிரிட்டு வருகிறார், நகர்புற விவசாயி பி.மாணிக்கவாசகம். 

எனினும், கூடுதல் வருமானத்தை பெறுவதற்காக, எளிதாக நிர்வகிக்க குறைந்த மனித ஆற்றலை பயன்படுத்தும் ஹைட்ரோபோனிக் முறையை மாணிக்கவாசகம் தற்போது பயன்படுத்தி வருகிறார். 

ஃபெர்திகேஷன் முறையில், ஓராண்டுக்கு நான்கு முறை, கிர்ணிப்பழத்தை பயிரிட்டு வந்த வேளையில், தற்போது ஹைட்ரோபோனிக் முறையில் ஐந்து முறை வரையில் பயிரிட்டு வருவதாகவும் மாணிக்கவாசகம் கூறினார். 

இம்முறை தாம் பயிரிட்டதில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிர்ணிப்பழத்தை விளைச்சலாகப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கிர்ணிப்பழத்தின் எடை மற்றும் அதன் நிலையைப் பொருத்து, அது A மற்றும் B தரங்களிளான பழங்கள் என்று நிர்ணயிக்கப்படும். 

இதனிடையே, இம்மாதிரியான நவீன விவசாயத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னர், விவசாயம் மற்றும் தானியங்கி தொடர்பான அடிப்படை விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும் மாணிக்கவாசகம் வலியுறுத்தினார்.

இப்பழத்தை தவிர்த்து, மிளகாய், பாகற்காய், வெள்ளரிக்காய் செடிகளோடு, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை மரங்களையும் பயிரிட்டு வருவதாகவும் மாணிக்கவாசகம் குறிப்பிட்டார். 

சிலாங்கூர், ஷா அலாமில் உள்ள பிளாசா ஶ்ரீ முடா கட்டிடத்தில் பயன்படுத்தப்படாத கார் நிறுத்தும் இடத்தில் பயிரிட்டு வரும் நகர்புற விவசாயி மாணிக்கவாசகம், இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க