பொது

ஜூலை முதல் நீச்சல் நடவடிக்கைகளுக்கு அனுமதி

22/06/2020 07:59 PM

புத்ராஜெயா, 22 ஜூன் (பெர்னாமா) -- ஜூலை ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான நீச்சல் நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக, இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலாக்கம் தொடர்பான அமைச்சர்களுடனான சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பொது நீச்சல் குளங்கள், தங்கு விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியார் குளங்கள் ஆகியவற்றில் நீச்சல் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

சம்பந்தப்பட்ட அந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவிற்கு ஏற்ப அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் இருப்பது அவசியமாகும். 

இந்தக் குளங்கள் அனைத்தும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சின் NOTIFICATION.MITI.GOV.MY என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 

செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நீச்சல் தவிர்த்து, ஆறு, கடல் மற்றும் ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா