அரசியல்

சினி சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப்போட்டி

20/06/2020 05:35 PM

பெக்கான், 20 ஜூன் (பெர்னாமா) --பஹாங், சினி சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்களுக்கு இடையே, மும்முனைப் போட்டி நிலவியுள்ளது.

இன்று காலை 10.25 மணியளவில், பெக்கானில் உள்ள தேசிய இளைஞர் திறன் மையத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர்,  சினி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பட்டியலை, தேர்தல் நிர்வாக அதிகாரி டத்தோ ஸலிஸா ஸுல்கில்ளி அறிவித்தார்.   

காலை 9 மணிக்கு  தொடங்கிய வேட்புமனு தாக்கலுக்கான பாரம் அனுப்பும் நடவடிக்கை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நிறைவுப் பெற்றது. 

வேட்புமனு தாக்கல் மையத்திற்குள் வரும் வேட்பாளர்களுக்கும் உடல் உஷ்ணப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு முகக் கவசம் அணியவும் அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், அரசியல் ஆதரவாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரிப்போர் யாவரும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அதேவேளையில் வேட்பாளர்களை ஆதரித்து ஆங்காங்கே குழுமும் நடவடிக்கைகளுக்கும் இன்றைய நாளில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, CHINI தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 60 வயது டத்தோ ஶ்ரீ அபு பாக்கார் ஹருண், இருதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

- பெர்னாமா