பொது

இன்று முதல் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை R&R ஓய்வெடுக்கும் பகுதிகள் செயல்படும்

12/06/2020 07:59 PM

கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா)  மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு PKPP-யின் மூன்றாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் ஒன்றாவது கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் R&R எனப்படும் ஓய்வெடுக்கும் பகுதிகள் செயல்படத் தொடங்கின.

அங்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுக் கடைகள், மசூதி மற்றும் கழிவறை ஆகியவற்றை, தற்போது புதிய இயல்பு முறையுடன், செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றி பயன்படுத்தப்படுவது, பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

கிழக்குக் கரைக்கு நோக்கிச் செல்லும் மற்றும் கோலாலம்பூருக்குத் திரும்பும் வாகனமோட்டிகளுக்கு ஓய்வெடுக்கும் முக்கிய இடமாக R&R GENTING SEMPAH விளங்குகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலம் கடந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை மற்றும் ஒன்றாவது கிழக்குக்கரை நெடுஞ்சாலை ஆகியவற்றின் ஓய்வெடுக்கும் பகுதிகளை PKPP, SOP-யின்படி தயார் செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.

திங்கட்கிழமை வரை, கோம்பாக்கிலிருந்து கிழக்குக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரிய துணை இயக்குநர் ABDULLAH HASHIM தெரிவித்தார்.

R&R கடைகளினுள் நுழைவதற்கு முன்னதாக  ஒவ்வொரு வருகையாளரும் தங்களின் பெயரைப் பதிவு செய்வதோடு, உடல் உஷ்ண பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, தொடுகை இடைவெளியைக் கடைபிடிக்குமாறும், முகக்கவசத்தை அணியுமாறும் எப்போதும் சுத்தத்தைப் பேணுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- பெர்னாமா