பொது

கொவிட்-19: செராஸ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் புதிய தொற்று

02/06/2020 07:38 PM

புத்ராஜெயா, 2 ஜூன் (பெர்னாமா) -- கோலாலம்பூர், செராஸ்-சில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில், புதிய கொவிட்-19 நோய் தொற்றுச் சம்பவத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது. 

நோன்பு பெருநாளின் போதும் அதற்கு முன்பதாகவும், வீடுகளுக்குச் செல்லும் நடவடிக்கையினால், இந்த புதிய தொற்று சம்பவம் ஏற்பட்டிருக்காலம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

சுகாதார அமைச்சு மற்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை ஒத்துழைப்பின் அடிப்படையில், தாஃபிஸ் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில், இந்த புதிய தொற்றுக் கண்டுப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

எனினும், அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள், ஶ்ரீ பெட்டாலிங் இஸ்லாமிய பேரணியில் கலந்துக் கொள்ளவில்லை என்று டாக்டர் நோர் ஹிஷாம் தெளிவுப்படுத்தினார். 

இதில், உறுதிப்படுத்தப்பட்ட ஆறு சம்பவங்கள், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் வசிப்பவர்களை உட்படுத்தியது என்றும் எஞ்சிய மூன்று சம்பவங்கள் அக்குடியிருப்பில் வசிக்காதவர்களை உட்படுத்தியது என்றும் அவர் கூறினார். 

இதனிடையே நாட்டில், இன்று, மேலும் 20 புதிய கொவிட் 19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில், இந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,877 ஆக பதிவுச் செய்யப் பட்டிருக்கிறது. 

புத்ராஜெயாவில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் நோர் ஹிஷாம் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

-- பெர்னாமா