பொது

மதுபான விற்பனைக்கான புதிய உரிமங்களை முடக்குவதற்கான பரிசீலனையை அமைச்சு ஆராயும் - சுராய்டா தகவல்

02/06/2020 02:56 PM

தெலுக் இந்தான், 2 ஜூன் (பெர்னாமா) -- மதுபோதையில் வாகனமோட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்றங்கள், புதிய மதுபானக் கடைகளுக்கான உரிமங்களை முடக்க வேண்டும் எனும் பரிந்துரையை பரிசீலிக்க, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு  தயாராக உள்ளது.

இருப்பினும், உரிமம் தொடர்பான விவகாரங்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதால், தற்காலிக நோக்கத்திற்காக அல்லாமல், புதிய உரிமத்தை முடக்குவதற்கான முடிவை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அதன் அமைச்சர் சுராய்டா கமாருட்டின் தெரிவித்திருக்கிறார். 

இதனிடையே, அமலாக்கச் சட்டத்தின் அடிப்படையில், மது விற்பனை மற்றும் தண்டனைகள் குறித்து மதிப்பாய்வு செய்வது தொடர்பில், போக்குவரத்து அமைச்சும் அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சும், சில விவகாரங்களை பரிசீலித்து வருவதாகவும் சுராய்டா தெரிவித்தார். 

அண்மைய காலமாக நாட்டில், மதுபோதையில் வாகனமோட்டி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதோடு மரணத்தையும் விளைவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். . 

-- பெர்னாமா