பொது

ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி, பச்சை மண்டலப் பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்

28/05/2020 04:08 PM

புத்ராஜெயா, 28 மே (பெர்னாமா) -- கடந்த மே 21-ஆம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் அமலாக்கம் தொடர்பான அமைச்சர்கள் சிறப்பு கூட்டத்தில், கொவிட்-19 நோய்த் தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் அமைந்திருக்கும், 174 வழிபாட்டுத் தலங்கள், நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-க்கு ஏற்றவாறு செயல்படுவதற்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அனுமதி வழங்கியிருக்கிறது. 

சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்கள், வரும் ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி, எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி செயல்படலாம் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமைச்சு தெரிவித்திருக்கிறது.

வழிபாட்டுத் தலங்களின் அளவைப் பொருத்து, ஒரு சமயத்தில் 30 பேருக்கும் மேல் போகாத பக்தர்கள் வழிபாடு செய்ய வேண்டும் எனும் எஸ்.ஓ.பி-யை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

அனுமதி பெற்றிருக்கும் வழிபாட்டுத் தலங்கள், ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி வழங்கப்பட்டிருக்கும் கிழமைகள் மற்றும் நேரத்தைப் பொருத்தே செயல்பட வேண்டும் என்றும் அமைச்சு 
நினைவுறுத்தியிருக்கிறது. 

இதனிடையே, னைத்து வழிப்பாட்டுத் தலங்களிலும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எஸ்.ஓ.பி-யை மீறும் பட்சத்தில், செயல்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதி உடனடியாக மீட்டுக் கொள்ளப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது 

-- பெர்னாமா