பொது

கோலாலம்பூர் ராஜா போட் சந்தையில் துப்புரவு பணிகள்

27/05/2020 08:14 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- கோலாலம்பூர் ராஜா போட் சந்தையில், கடந்த மே 18-ஆம் தேதி தொடங்கி இன்று வரையில் விரிவான துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதனிடையே, கோலாலம்பூர் பசார் போரோங் பகுதியில் வெளிநாட்டினர் நுழையாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு, அச்சந்தையை சுற்றி இருக்கும் சுவர் பகுதிகளில் தமது தரப்பினர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகமான டி.பி.கே.எல் தெரிவித்திருக்கிறது.

டி.பி.கே.எல்-லின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அலாம் ஃப்புலோரா நிறுவனத்துடன் இணைந்து இந்த துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவு பணிகளுக்காக, 30 லாரிகள் பயன்படுத்தப்பட்டு, அச்சந்தையில் வியாபாரம் செய்த சிறு வியாபாரிகள் விட்டுச் சென்ற பொருட்கள் மற்றும் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதாகவும் டி.பி.கே.எல் தெரிவித்துள்ளது. 

கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் டி.பி.கே.எல் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது. 

இதனிடையே, கோலாலம்பூர் பசார் போரோங் சுற்றியுள்ள இடமும் அங்குள்ள பொருட்களும் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிச் செய்ய ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சந்தையின் வர்த்தக உரிமையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளான தொடுகை இடைவெளி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்ய இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

வெளிநாட்டினர் உள்ளே நுழைவதை தடுக்கும் முயற்சிகள் மட்டுமின்றி, சந்தைக்கு வந்து செல்லும் வாகனமோட்டிகளின் உடல் உஷ்ண பரிசோதனைகளும் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. 

ஆயிரத்து 395 வாகனங்கள் சோதனையிடப்பட்டதோடு, ஆயிரத்து 530 பேருக்கு சுகாதாரப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா