பொது

சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்தில் வீரம் காட்ட வேண்டாம்

27/05/2020 07:59 PM

புத்ராஜெயா, 27 மே (பெர்னாமா) -- எந்தவொரு அரசியல் தலைவரோ அல்லது அரசு சார்பற்ற அமைப்புகளோ, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி, தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியதில்லை.

சட்டவிரோதக் குடியேறிகள் மற்ற நாடுகளில் நடத்தப்படுவது போல் அல்லாமல், அவர்களை சிறந்த முறையில் கையாள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

சட்டவிரோத குடியேறிகளை தங்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது குறித்து, சம்பந்தப்பட்ட  நாடுகளுடன் கலந்துரையாடுமாறு வெளியுறவு அமைச்சு மற்றும் குடிநுழைவுத் துறையை தாம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, முக்கிய பிரமுகரோ அல்லது சாதாரண குடிமகனோ, எவ்வித பாராபட்சமுமின்றி சட்டத்தை மீறும் ஒவ்வொறுவர் மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

புத்ராஜெயாவில், புதன்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்மாயில் சப்ரி, நோன்பு பெருநாளின் போது, நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபிபியை மீறிய தரப்பினருக்கு எதிராக எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், அத்தகைய குற்றங்களைப் புரியும் தரப்பினர் மீது, எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது என்பது, அரச மலேசிய போலீஸ் படையைப் பொருத்தது என்றும் அவர் கூறி இருக்கிறார். 

நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களின் போது, ஒரு சில முக்கிய பிரமுகர்கள், செயல் பாட்டுதர விதிமுறையை மீறி, தொடுகை இடைவெளியை பின்பற்றாமல், விருந்தினரை உபசரிப்பது போன்ற தங்களின் படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, இஸ்மாயில் சப்ரி இவ்வாறு பதில் அளித்தார். 

-- பெர்னாமா