பொது

வாகனக் கொள்ளளவுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

26/05/2020 08:00 PM

புத்ராஜெயா, 26 மே (பெர்னாமா) -- தற்போது ஓட்டுநர்கள் தங்கள் வாகனத் கொள்ளவுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட ஓட்டுனருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். 

இம்முடிவு, தனியார் வாகனங்களுக்கு மட்டும் உட்பட்டது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள், எண் 6-ரில் செய்யப்படும் திருத்தத்தை பொருத்தே அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே, நோன்பு பெருநாளின் இரண்டாவது நாளான நேற்று, மாநிலம் கடந்து செல்ல முயற்சித்த 738 வாகனங்களை அரச மலேசிய போலிஸ் படை திரும்பி அனுப்பி வைத்ததாகவும், இதற்கு முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 1243-ஆக இருந்ததாகவும் இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டிருக்கிறார். 

நாடு முழுவதிலும், மாநிலம் கடந்துச் செல்வது தொடர்பான, 153 சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது. 

நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் செயல்பாட்டு தர விதிமுறையை அமலாக்கம் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் போலீஸ் தலைமையிலான அமலாக்க நடவடிக்கைக் குழு நாடு முழுவதிலும் 61 ஆயிரத்து 876 சோதனைகளை நடத்தி இருக்கிறது. 

இச்சோதனைகளில் பிகேபிபியை மீறியதற்காக 65 பேர் கைதுச் செய்யப்பட்டிருக்கின்றனர். 

அதில், 57 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில் எண்மர் ஜாமினில் விடுதலைச் செய்யப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கிறார். 

இதனிடையே, நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் தங்கி இருக்கும் தங்கும் விடுதிகள் மற்றும் கொங்சி வீடுகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, மனிதவள அமைச்சு நாளை விரிவான விளக்கத்தை வழங்க விருக்கிறது. 

அவ்விரு வளாகங்களும், மனிதவள அமைச்சு நிர்ணயித்திருக்கும் எஸ்ஓபியைக் கொண்டிருப்பதாக, டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டிருக்கிறார். 

திருத்தம் செய்யப்பட்ட 2019-ஆம் ஆண்டு வீடு மற்றும் வேலை வாய்ப்புக்கான குறைந்தபட்ச தர நிர்ணய சட்டத்தின் கீழ், அனைத்து தொழில்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் வீடமைப்பின் குறைந்தபட்ச தரநிலையை மேம்படுத்துவதே அதன் நோக்கமாகும். 

-- பெர்னாமா