பொது

நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில வழிபாட்டுத் தலங்கள் செயல்படும்

22/05/2020 05:21 PM

கோலாலம்பூர், 22 மே (பெர்னாமா) -- நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபிபியின் போது, பச்சை மண்டல பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள், ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கின்றது. 

இருப்பினும், நாட்டின் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும், ஆறு மாநிலங்களில் உள்ள ஆலயங்கள் மீண்டும் செயல்படுவதற்கு, இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்திருக்கின்றார். 

இந்நிலையில், நாட்டில் உள்ள 84 ஆலயங்கள் மீண்டும் செயல்பட அனுமதி பெற்றிருந்தாலும், அவ்வாலயங்கள் வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு திறக்கப்படும் என்று டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார். 

அதோடு, ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் செயல்பாட்டுத் தர விதிமுறை, எஸ்ஓபி-யை பின்பற்றுவதுடன், ஆலய நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் வழிப்பாட்டிற்கு வரக்கூடிய நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

இக்கால கட்டத்தில், மலேசியர்களுக்கு மட்டுமே ஆலயங்களில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், பொது மக்கள் தங்களின் அடையாள அட்டையை உடன் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

அதே வேளையில், நாட்டில் உள்ள சில ஆலயங்கள் மீண்டும் செயல்படுவது குறித்த அரசாங்கத்தின் இம்முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் வேளையில், தற்போதையச் சூழலுக்கு இந்நடைமுறை ஏற்புடையது அல்ல என்கிறார் பேரா, ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகானந்தா. 

இச்சூழலில் அதிகமான செயல்பாடுகளும், செலவுகளும் இருப்பதால், இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். 

-- பெர்னாமா