பொது

பூர்வக்குடி மக்களுக்கான முதல் கட்ட உணவு விநியோகத் திட்டம் ஏப்ரல் 10 ஆம் தேதி நிறைவடையும்

09/04/2020 07:49 PM

புத்ராஜெயா, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கிய, பூர்வக்குடி மக்களுக்கான முதல் கட்ட உணவு விநியோகத் திட்டம், 10 ஆம் தேதி நிறைவடையும். 

50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம், 853 கிராமங்களைச் சேர்ந்த 49, 670 பூர்வக்குடி மக்களை உட்படுத்தி இருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய, இரண்டாம் கட்ட உணவு விநியோகத் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த உதவியைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 55 ஆயிரம் குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக் காலகட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்களிடையே எழுந்துவரும் புகார்கள் குறித்து கருத்துரைத்த டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், உணவு விநியோகம், தினசரி நிர்வகிப்பு மற்றும் அதன் தொடர்பான விவகாரங்கள் குறித்த எந்தவொரு பிரச்னையையும், மாவட்ட அதிகாரி, சமூகநல இலாகா அல்லது மாவட்ட பேரிடர் செயற்குழு ஆகியவற்றிடம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டார். 

எந்தவொரு பிரச்சனைகளை பற்றியும் சமூக வலைத்தளங்களில் முறையிடுவதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவிக்குமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். 

-- பெர்னாமா