பொது

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக நேற்று புதன்கிழமை 300 பேர் கைது 

09/04/2020 07:56 PM

புத்ராஜெயா, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக, அரச மலேசிய போலீஸ் படை நேற்று புதன்கிழமை 300 பேரை கைதுச் செய்திருக்கின்றது. 

செவ்வாய்கிழமை 454 பேர் கைதுச் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை அந்த எண்ணிக்கை 34 விழுக்காடு குறைந்திருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கின்றார். 

கைது செய்யப்பட்ட 300 பேரில், 252 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வேளையில், 48 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதாக, அவர் கூறினார். நாட்டில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக இதுவரையில், 7 ஆயிரத்து 205 பேர் கைதுச் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நேற்று புதன்கிழமை தொடங்கி, பி.கே.பி.-யை மீறும் நபருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், இதுவரையில் அக்குற்றம் தொடர்பில் 95 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.  ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை செலுத்தத் தவறுபவர்கள், நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். 

-- பெர்னாமா