உலகம்

கொவிட்-19 நோய் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். அமெரிக்காவுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்

09/04/2020 07:57 PM

ஜெனீவா, 9 ஏப்ரல் [பெர்னாமா] --  கொவிட்-19 நோய்த் தொற்றால் உலக நாடுகள் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் வேளையில், இந்நோய் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நோய் மேலும் பரவாமல் இருக்க, உலக நாடுகளின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதால், அமெரிக்கா இதில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அந்நிறுவனத் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொவிட்-19 நோயின் தாக்கத்தை குறைக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய டாக்டர் டெட்ரோஸ், ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.மேலும் இந்நோயை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண மதிப்பீடுகள் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 நோய்த் தொற்று விவகாரத்தில், உரிய நேரத்தில் தகவல்கள் அளிக்காததால், உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். அந்த நிறுவனத்தின் தாமதமான செயல்கள், உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருப்பதால், இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

-- பெர்னாமா