பொது

மாமன்னரை இழிவுப்படுத்திய ஆடவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

08/04/2020 08:09 PM

கோலாலம்பூர், 8 ஏப்ரல் [பெர்னாமா]  -- மாட்சிமை தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்திய எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஆடவர் ஒருவர், இன்று  கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

ஃபஸ்ரின் இஸ்மாயில் எனும் தமது டிவிட்டரில் மாட்சிமை தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் கருத்தைப் பதிவேற்றம் செய்தது தொடர்பான விசாரணையின்போது, அந்த ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை கைதுச் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசிர் முஹமாட் தெரிவித்திருக்கிறார்.

மாட்சிமை தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் கருத்தைப் பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து,  அந்த  டிவிட்டர் உரிமையாளர் மீது, வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணை பிரிவு, யுஎஸ்ஜேடி  விசாரணையைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், செக்‌ஷன் 4 உட்பிரிவு 1 மற்றும் 1988-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233-ரின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாடவர், நேற்று வரையில் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுபோன்ற விவகாரங்களில் போலீசார், சமரசப் போக்கை கடைப்பிடிக்காது என்றும் குற்றவாளி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதை உறுதிச் செய்ய கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் ஹுசிர் தெரிவித்தார். 

-பெர்னாமா