பொது

கொவிட்-19: நாட்டில், இன்று மட்டும் 236 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர்

06/04/2020 07:54 PM

புத்ராஜெயா, 06 ஏப்ரல் [பெர்னாமா] -- நாட்டில், இன்று மட்டும், கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட 236 பேர், முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை, முதல் முறையாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறுகின்றார்.

புத்ராஜெயாவில், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவல்களைத் தெரிவித்தார். 

நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில், மேலும் 131 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. 

இப்புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து, நாட்டில் இதுவரையில் மொத்தம், 3,793 பேருக்கு இந்நோய்க் கிருமிக் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்நோயினால், கடந்த 24 மணி நேரத்தில், ஒருவர் பலியாகியிருப்பதைத் தொடர்ந்து, மொத்த மரண எண்ணிக்கை 62-ஆகப் பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நோய் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும், 102 பேரில், 54 பேருக்குச் சுவாச உதவித் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

-- பெர்னாமா