உலகம்

கொவிட்-19: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், இத்தாலியை ஸ்பெயின் மிஞ்சியிருக்கிறது 

05/04/2020 03:32 PM

மெட்ரிட், 05 ஏப்ரல் [ பெர்னாமா] -- கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், இத்தாலியை ஸ்பெயின் மிஞ்சியிருக்கிறது. 

ஸ்பெயினில், இதுவரையில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 168 கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் வேளையில், பலியானவர்களின் எண்ணிக்கை, 11,947-ஆகப் பதிவாகி இருக்கிறது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இரண்டாயிரத்து 886 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இதுவரை, மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 632 பேருக்கு இந்நோய்த் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொவிட்-19 உருவாகிய சீனாவின், வுஹான் நகரம் தற்போது ஆபத்து குறைவான நகரமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்நகரில் இருக்கும் 13 மாவட்டங்களில், 9 மாவட்டங்கள், ஆபத்து குறைவான பகுதிகளாகவும் எஞ்சிய நான்கு மாவட்டங்கள் நடுத்தர ஆபத்தான பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக, சீன கொவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மன்றம் கூறியிருக்கிறது,

சனிக்கிழமை வரையில், சீனாவில் பதிவாகிய 30 புதிய கொவிட்-19 சம்பவங்களில், 25 சம்பவங்கள் வெளிநாட்டினருடன் தொடர்புடையவையாகும்.

கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில், கொவிட்-19 நோய்க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில், இதுவரையில், 2,686 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் வேளையில், 40 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

உலகின் 206 நாடுகளில், கொடிய கொவிட்-19 நோய்ப் பரவியிருக்கும் நிலையில், இந்நோய்க்குப் பலியாகி இருப்போரின் எண்ணிக்கை 64,747 ஆக உயர்ந்திருக்கிறது.

உலகம் முழுமையிலும் இது நாள் வரையில் 12 லட்சத்து 3,292 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். 

-- பெர்னாமா