சிறப்புச் செய்தி

கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த போராடும் முன்னிலைப் பணியாளர்களுக்கு குவியும் உதவிகள்

02/04/2020 08:06 PM

சிலாங்கூர், 02 ஏப்ரல் (பெர்னாமா) -- கோவிட் 19 தொற்றை முற்றாக துடைத் தொழிப்பதில், மலேசியர்கள் ஒன்றிணைந்து போராடி வரும் வேளையில், பல நிறுவனங்கள் தங்களின் சமூக கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. 

இதில், நாட்டின் பிரபல சொத்துடமை நிறுவனங்களில் ஒன்றான எஹ்சான் குழுமம் , கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு, நோயாளிகளுக்கான 10 கட்டில்களையும் மெத்தைகளையும் வழங்கியுள்ளது. 

கோவிட்19 தொற்றின் காரணமாக நாட்டில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் , மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதில் முன்னணி நிறுவனங்கள் சமூக கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று எஹ்சான் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் பி.வி. அப்து தெரிவித்துள்ளார். 

தொடக்க கட்டமாக கிள்ளானில் உள்ள மருத்துவமனைக்கு உதவிகளை வழங்கியுள்ள தமது நிறுவனம் மேலும் பல மருத்துவமனைகளுக்கு உதவிகளை வழங்க ஆலோசித்திருப்பதாக அப்துல் ஹமிட் கூறினார். 

கோவிட் 19 தொற்றின் காரணமாக பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தங்களின் சமூக கடப்பாட்டில் இருந்து அவை விலகி விடக்கூடாது என்றும் அப்துல் ஹமீட் கேட்டுக் கொண்டார். 

மற்றொரு நிலவரத்தில், சுங்கை பூலோ, கோலாலம்பூர், கிள்ளான் துன் அமினா மருத்துவமனைகளுக்கும், தேசிய இருதய கழகமான, ஐஜேஎன்-னுக்கும், முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை மஹ்சா பல்கலைகழகம் வழங்கியுள்ளது. கொவிட்-19 நோயை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் மருத்துவர்களும் தாதியர்களும் தொடந்து பாடுபட்டு வருகின்றனர். 

அவர்களின் நலனைக் கருதில் கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய இந்தப் பொருட்கள், வழங்கப்பட்டதாக, மஹ்சா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் முஹமட் ஹனிஃபா தெரிவித்தார். 

-- பெர்னாமா