பொது

நாடு முழுவதிலும் திங்கட்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

30/03/2020 08:30 PM

கோலாலம்பூர், 10 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் முயற்சியாக இன்று திங்கட்கிழமை நாடு முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விரிவுப்படுத்துவதற்கு முன்னர் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நடவடிக்கை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் பொறுப்பில் உள்ள  மலேசிய தீயணப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஊராட்சி மன்றங்கள் வழியாக அமல்படுத்தப்படுகிறது.

கெடா மாநிலத்தில் சுகாதார அமைச்சு சுங்கை பட்டாணி நகராண்மைக் கழகம், SWCORP, E-IDAMAN ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தீயணைப்புத்துறை கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.

கோல மூடா மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பொதுச் சந்தை, பேரங்காடிகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனிடையே லங்காவியில், சுற்றுலா நகரம் லங்காவி நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் சுகாதாரத்துறைச் சேர்ந்த ஊழியர்கள், குவாவில் உள்ள ஃபெரி முனையம் மற்றும் தாமான் ஶ்ரீ பெர்லியான் குடியிருப்புப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். 

கோலாலம்பூர் புக்கிட் டாமான்சாரா சுற்று வட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் கூட்டரசு பிரதேச அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

மற்றொரு நிலவரத்தில் பினாங்கில் அபாயகரமான ரசாயண சிறப்புக்குழு, ஹஸ்மாட், பினாங்கு மாநில மலேசிய தீயணப்பு மற்றும் மீட்புத்துறையுடன் இணைந்து ஜார்ச்டவுனில் உள்ள தஞ்சோங் தோக்கோங் தற்காலிக வியாபார பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.

- பெர்னாமா