பொது

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக தனியார் கிளினிக் மருத்துவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

30/03/2020 08:19 PM

ஜார்ஜ்டவுன், 30 மார்ச் [பெர்னாமா] -- அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காகவும், தனியார் கிளினிக் மருத்துவர், இன்று திங்கட்கிழமை காலை, பினாங்கு,  ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 

இருப்பினும், மாஜிஸ்திரேட் ஜமாலியா அப்துல் மனாப் முன்னிலையில் வாசிக்கப் பட்ட அவ்விரு குற்றச்சாட்டுகளையும், தஞ்சோங் பூங்கா-வைச் சேர்ந்த 61 வயதான மருத்துவர் ஓங் ஹியென் தெய்க், மறுத்து விசாரணைக் கோரி இருக்கிறார்.

முதல் குற்றச்சாட்டில், கடந்த மார்ச் 19-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு ஜாலான் பெர்சியாரான் குவாரி அருகிலுள்ள தாமான் பண்டாராயாவில் பணியில் ஈடுபட்டிருந்த முஹமட் அலிஃப் ஐசாட் அப்துல் லத்தீஃப் என்ற பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்,  தமது கடமையைச் செய்வதற்கு தடையாக இருந்ததாக அம்மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 186-ரின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே தினத்தன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

13 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஓங்,  தமது அனைத்துலக கடப்பிடழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும், மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தனது வருகையை அவர் பதிவுச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

-- பெர்னாமா