பொது

கொவிட்-19 : மைய்ப்ஸ்சின் இரண்டு மண்டபங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை துரிதம்

29/03/2020 08:26 PM

செர்டாங், 29 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க செர்டாங்கில் இருக்கும் மலேசிய விவசாயக் கண்காட்சி பூங்காவின் இரண்டு மண்டபங்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையமாக மாற்ற சுகாதார அமைச்சின் ஊழியர்களும் குத்தகையாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். 

அந்த மண்டபங்களைக் கூடுதல் மருத்துவமனையாக உருவாக்குவதற்குத் தேவையான பொருட்கள் அங்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்திருக்கிறது. 

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தக் கண்காட்சி மற்றும் பெரிய அளவிலானக் கூட்டங்கள் நடத்தப்படும் மைய்ப்ஸ் தற்காலிக மருத்துவமனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. 

மைய்ப்ஸ்சில் இருக்கும் எ மற்றும் பி மண்டபங்கள் கொவிட்-19  நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றியமைக்கப்படுகின்றன. 

வரும் ஏப்ரல் மாத மத்தியில் கொவிட்-19  நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தால், அதற்காக பயன்படுத்துவற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றியமைக்கப்படும் இம்மையத்தின் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

இம்மையத்தின் எ மண்டபத்தில் 400 கட்டில்களும் பி மண்டபத்தில் 200 கட்டில்களுமாக மொத்தம் 600 கட்டில்கள் வைக்கப்படவிருக்கின்றன. 

நாடு முழுவதிலும், கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிசிக்சையளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூவாயிரத்து 400 கட்டில்களையும் கேகேஎம் பயற்சிக் கழகத்தில் ஆயிரத்து 892 கட்டில்களையும் கேகேஎம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன்வழி மொத்தம் ஐந்தாயிரத்து 292 கட்டில்கள் தற்போது இருக்கின்றன. 

--பெர்னாமா