அரசியல்

தாமே பெர்சத்து கட்சித் தலைவர் - மகாதீர்

07/03/2020 07:14 PM

குபாங் பாசு, 07 மார்ச் [பெர்னாமா] -- பெர்சத்து கட்சி, இரண்டாக பிளவுப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்ட துன் டாக்டர் மகாதீர் முகமது, தாம் இன்னும் அக்கட்சியின் தலைவரே என்று கூறி இருக்கிறார். 

பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின், தம்மை பெர்சத்து கட்சித் தலைவராக கூறிக் கொள்ள முடியாது. காரணம், அது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று, டாக்டர் மகாதீர் சாடி இருக்கின்றார். பெர்சத்து கட்சியின் உச்சமன்றம் தமது பதவி விலகலை நிராகரித்ததால், தாம் மீண்டும் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார். 

கெடா, குபாங் பாசு-வில் நடைபெற்ற மக்களுடனான விருந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார். 

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர், பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, முகிடின், தாம் அப்பதவியை ஏற்பதாக, கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி அறிவித்திருந்தார். 

எனினும், ஒருவர் மட்டுமே கட்சித் தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று பெர்சத்து-வின் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர் தெரிவித்தார். 

-- பெர்னாமா