மாமன்னரின் முடிவுக்கு நம்பிக்கைக் கூட்டணி மதிப்பளிக்கும்

26/02/2020 08:28 PM

பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அறிவிக்கவிருக்கும் முடிவு, நாட்டை நிர்வகிக்க நிர்ணயிக்கவிருக்கும் நபர் மற்றும் கட்சிக்கு நம்பிக்கைக் கூட்டணி மதிப்பளிக்கும். 

நடப்பில் இருக்கும் அரசியலமைப்பின் மூலம் கலந்துரையாடலின் வழி முடிவெடுப்பது மாமன்னரின் சாமர்த்தியத்தைப் பொருத்தது என்று கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். 

அதேவேளையில், கொல்லைப்புற வழியாக நுழைந்து ஆட்சியை அமைக்கும் எந்தவொரு முயற்சியையும் நம்பிக்கை கூட்டணி ஏற்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து, ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள்  நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கினார்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் ரீதியாக சிறந்த ஆட்சியை வழங்குவதில் நம்பிக்கைக் கூட்டணி அதிக கவனம் செலுத்தும் என்றும் அன்வார் தெரிவித்தார். 

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றக் கூட்டத்தில், பிரதமர் பதவிக்கான நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக தாம் நிர்ணயிக்கப்பட்டதாக அன்வார் கூறினார்.

அக்கூட்டத்தைத் தலைமையேற்பதற்கு துன் டாக்டர் மகாதீர் அழைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

ஆனால், அதில் கலந்துக் கொள்வதற்கு டாக்டர் மகாதீர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் கெஅடிலான் கட்சித் தலைமையகத்தில், புதன்கிழமை, நம்பிக்கைக் கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வார் இதனைத் தெரிவித்தார். 

துன் டாக்டர் மகாதீர் முகமது கடந்த திங்கட்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தை அமைக்க குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவளிக்கும் தங்களின் நிலைத்தன்மையை தெரிவிக்க 131 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாமன்னரைச் சந்தித்தனர்.

--பெர்னாமா