பொது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் தாக்கல் தொடர்பில் நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு

26/02/2020 08:07 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி [பெர்னாமா] --  பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் தாக்கல் தொடர்பில், இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியிருக்கின்றார்.

கொவிட்-19 நோயினால், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் மற்றும் பிற வெளிப்புற நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த ஊக்குவிப்பு தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தமது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், டாக்டர் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

இருப்பினும், இத்திட்டத்தின் விபரங்கள் மற்றும் அதை அறிவிப்பதற்கான தேதி குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. தொடக்கத்தில், இதன் அறிவிப்பு, பிப்ரவரி 27-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 நோய் பரவலினால், விமான போக்குவரத்து, சில்லறை மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கத்தைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த ஊக்குவிப்பு திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அத்தொற்று நோயினால், உலக பொருளாதார வளர்ச்சியில் 0.1-லிருந்து 0.2 விழுக்காடு வரையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அனைத்துலக நாணய நிதியம், ஐ.எம்.எஃப். முன்னதாக அறிவித்திருந்தது.

திறந்த பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தும் மலேசியா, வெளிப்புற தாக்கத்தில் இருந்து விடுபட்டதில்லை. ஆகவே, கொவிட்-19 நோய் பரவலினால், 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா