அரசியல்

நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகள் மற்றும் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாமன்னர் சந்திப்பு

26/02/2020 03:02 PM

கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- நேற்று, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா இன்று, புதன்கிழமை நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகள் மற்றும் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, இஸ்தானா நெகாராவில் சந்தித்து வருகிறார். 

இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை காலை 10.00 மணி தொடங்கி எஞ்சிய 132 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டை தாமே கேட்டுத் தெரிந்துக் கொள்வதில் மாமன்னர் முற்பட்டிருக்கின்றார். 

நாட்டின் நடப்பு அரசியலின் அண்மைய நிலவரம் குறித்து தகவல்களைச் சேகரிப்பதற்காக இஸ்தான நெகாரா வளாகத்தில் முற்றுகையிட்டிருக்கும் செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது, கெஅடிலான கட்சியைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் வருகையாகும். 

HOP ON HOP OFF, இரண்டடுக்கு பேருந்தில் வந்திரங்கிய கெஅடிலான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, காலை 9 மணி முதலே இஸ்தானா நெகாரா வளாகத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் ரிபோர்மாசி என்ற முழக்கத்துடன் வரவேற்றனர். 

அதில், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர், நூருல் ஈசா அன்வார்,  செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர், வில்லியம் லியோங் ஜீ கீன், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர், ஃபாமி ஃபாட்சில் மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர், வோங் ஜென் ஆகியோரும் அடங்குவர். 

இதனிடையே, பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முதல் குழு காலை 10 மணியளவில் இஸ்தான நெகாரா வளாகத்தை வந்தடைந்தது. 

அவர்களில், பாகோ நாடாளுமன்ற உறுப்பினர், டான் ஶ்ரீ முகிடின் யாசின்-னும், அலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ஶ்ரீ முஹமட் ரெட்சுவான் முஹமட் யூசோப்-பும் காலை 10.15 மணிக்கு இஸ்தான நெகாராவை வந்தடைந்தனர். 

அமானா கட்சியின் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சலாஹூடின் அயோப் நண்பகல் 12 மணியளவில் வந்தடைந்தார். 

பின்னர், பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ஶ்ரீ முஜாஹிட் ரவா, பொக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ மாஃபூஸ் ஒமார் மற்றும் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர், காலிட் சமாட் ஆகியோர் வருகைப் புரிந்ததையும் காண முடிந்தது. 

-- பெர்னாமா