பொது

கொவிட்-19:  66 மலேசியர் மட்டுமே வுஹானிலிருந்து இன்று நாடு திரும்பினர்

26/02/2020 02:57 PM

சிப்பாங், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் பரவி வருவதைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட 75 மலேசியர்களில், 66 பேர் மட்டுமே, சீனா, வுஹானிலிருந்து இன்று புதன்கிழமை காலை, நாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

கொவிட்-19 நோயிற்கு ஆளானவர்கள் மட்டுமே சிரம்பான் துவாங்கு ஜாப்பார் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். 

சுகாதாரப் பரிசோதனையைக் கடந்த எஞ்சியவர்கள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக, நீலாய் தலைமைத்துவ உயர்கல்விக் கழகத்தின் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம், நட்மா, தலைமை இயக்குநர் டத்தோ மொக்தார் அப்துல் ரஹ்மான் தெரிவித்திருக்கின்றார். 

மனிதநேய மற்றும் பேரிடர் உதவிக்குழு, HADR-ரின், AK8265 ஏர் ஆசியா விமானம், காலை 6.50 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்த சிறப்பு விமானம் அதிகாலை 1.45 மணிக்கு வுஹான் தியான்ஹே அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. 

மலேசியப் பிரஜைகளைத் தவிர்த்து, இவ்விமானம் மூலம் விமானப் பணியாளர்கள் 12 பேர், இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒன்பது அரசாங்க நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் உட்பட 89 பேர் மலேசியா வந்தடைந்திருக்கின்றனர். 

முதலில், 75 பேர் நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதில் ஒன்பது பேர், பல்வேறு காரணத்தினால், நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சு, ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

வுஹான் தியான்ஹே அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்த அறுவர், சுகாதாரப் பிரச்சனைக் காரணமாக அவ்விமானத்தில் நாடு திரும்ப முடியாமல் போனது. 

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி, மனிதநேய மற்றும் பேரிடர் உதவிக்குழு மூலம், ஹுபேய் மாகாணத்திலிருந்து 107 மலேசியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டனர். 

-- பெர்னாமா