உலகம்

கொவிட்-19 நோயினால் ஈரானில் இதுவரை 12 பேர் பலியாகி இருக்கின்றனர்

25/02/2020 08:28 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி [பெர்னாமா] --  சீனாவை தொடர்ந்து, கொவிட்-19 நோயினால் ஈரானில் இதுவரை 12 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 61 பேருக்கு இந்நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரானை தொடர்ந்து, ஈராக், குவைத், பெஹ்ரான், ஓமன் என்று, மத்திய கிழக்கு நாடுகளிலும் கொவிட்-19 நோய் பரவி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, 75 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், கொம் எனும் நகரில் மட்டும் 50 பேர் மரணமடைந்திருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

தெஹ்ரான் நகரில் உள்ள போதை பித்தர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் இருக்கும் 10,000 பேர் கொவிட்-19 நோயினால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஈரான் நாட்டில் இருந்து, ஓமன் நாட்டிற்கு திரும்பிய இரு பெண்களுக்கு கொவிட்-19 நோய் பரவி இருப்பதை அந்நாட்டு அரசு உறுதி படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கு, பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சு கூறுகிறது.

-- பெர்னாமா