சிறப்புச் செய்தி

உலகத் தாய் மொழி தினம் 2020

23/02/2020 08:05 PM

தந்தையான சிவனும் தாயான தமிழும் ஒளியும் மொழியுமாய் மணக்கும் அபூர்வ நாள் இன்று. சிவராத்தியின்  பிராத்தனைகள்  உள்ளங்களில் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்க மறுபுறம் உலக தாய்மொழி தினமான இந்நாளில் தமிழுக்கான போற்றுதல்கள் சமூக ஊடகங்கில் நிறைந்து, பெருமையைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றன. 

உலகில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மொழிகள்  இருக்கையில், அதில் மூவாயிரம் மொழிகளுக்கு மட்டுமே இலக்கணம் உண்டு. அதிலும் 6 மொழிகள் மட்டுமே செம்மொழி என்றாலும், உலகத் தாய்மொழிகளுக்கு எல்லாம் தாயாக நிற்கும் தமிழே-- தொன்மையான முதல் மொழி என்பது தமிழினத்திற்கே கிடைத்த பெருமை.

நாட்டில் அதற்கு அடையாளாக நிற்கும் தமிழ்ப்பள்ளிகள் தாய்மொழியை வளர்ப்பதிலும் கொண்டாடுவதிலும் முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து பெர்னாமா தமிழ்ச்செய்தி மேற்கொண்ட சிறப்பு கண்ணோட்டம்.

1952-ஆம் ஆண்டில்  இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக உலகளவில் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. 

செம்மொழி அங்கீகாரத்தைப் பெற எட்டு கூறுகள் வரையறுக்கப்படிருக்கின்றன. ஆயினும் தமிழ் பெயர், இனிமை, எளிமை, தனிமை, தொன்மை, சுழி, எழுத்து, சொல், ஒளி, கவிதை, கலை, மருத்துவம், இசை, நாடகம், இலக்கணம் இலக்கியம் என்று - 16 சிறப்புகளோடு தனித்துவமாக திகழ்கிறது. 

இன்னும் தெய்வப் புலவர் வள்ளுவனின் திருக்குறள் தொடங்கி, முதல் இலக்கண  விதியாம் தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியங்கள், குறுந்தொகை, நாலடியார், மூதுரை, ஆத்திச்சூடி, தேவாரம், திருவாசகம் என்று இப்படி தெய்வப்புகழ் மொழிகள் உலகில் வேறு எந்த மொழிகளுக்கும் கிடையாது என்பது பெருமைக்குரிய கர்வம்.

அந்த பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதிலும் கற்றுக்கொடுப்பதிலும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கோலாலம்பூர், சுங்கை பீசி தமிழ்ப்பள்ளியின் தலமை ஆசிரியர் உதய சுந்தரி முனியாண்டி.  

உருவமே இல்லாமல் உலகை இயக்கிக்கொண்டிருக்கும் தாய்மொழி தங்களுக்கு உயிராக இருப்பதுடன், மாணவர்களுக்கு கலாச்சார பண்பாடுகளைப் போதிக்கும் வழியாகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பதில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் கவனமாக இருக்கின்றனர்.

இன்றைய தேவைக்கு ஏற்ப ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் தெரியாத ஒரு சந்ததியினரை பெற்றோர்கள் உருவாக்கி வருவதும் மறுப்பதற்கில்லை. இத்தகையை நிலையை மாற்றி அமைக்கும் இடத்தில்  தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை தமிழ்ப்பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுங்கை பீசி  தமிழ்ப்பள்ளி முன்வைத்துள்ளது.